தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயில் சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுப்பது தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கானோர் வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கும் நிலை நிலவுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண காவல் துறையினரும், மாநகராட்சி நிர்வாகத்தினரும் திட்டமிட்டு வருகின்றனர். பெரிய கோயில் சாலையை வாகன நிறுத்துமிடமாகவும், தற்போதுள்ள வாகன நிறுத்துமிடத்தைப் போக்குவரத்து பாதையாகவும் மாற்றத் திட்டமிடப்பட்டு வருகிறது.
தற்போதுள்ள சாலையில் வாகன நிறுத்துமிடமாக மாற்றும்போது பக்தர்கள் எளிதாக கோயிலுக்குள் செல்வதற்கு வசதியாக இருப்பது மட்டுமல்லாமல், போக்குவரத்து நெரிசலையும் குறைக்கலாம் என கருதுகின்றனர்.
இதேபோல, பெரிய கோயிலுக்கு எதிரே வாகன நிறுத்துமிடத்திலுள்ள ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவரை இடித்துவிட்டு 40 அடி அகலத்துக்கு இடத்தைப் பெற்று புதிய சாலை அமைக்கவும், அச்சாலையின் வழியாக அனைத்து வாகனங்களும் சென்று வந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது எனவும் அலுவலர்கள் கருதுகின்றனர்.
இந்த இரு திட்டங்களையும் எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் ஆய்வு செய்தார்.
அப்போது இத்திட்டங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் க. கண்ணன் விளக்கிக் கூறினார். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் காவல் கண்காணிப்பாளர் கேட்டறிந்தார். அப்போது, தஞ்சாவூர் நகரப் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் எம்.ஜி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.