சென்னை: காந்தி ஜெயந்தி தினத்தன்று (அக்டோபர் 2) நடக்கும் கிராமசபை கூட்டங்களில், தலைமை ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் துறை இயக்குனர் எஸ்.நாகராஜ முருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அடிப்படை வசதிகளை வழங்க, ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்’, மத்திய அரசால், 2022-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 15 வயதுக்கு மேற்பட்ட படிக்காதவர்களுக்கு கல்வியறிவு அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி அளிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் எழுத படிக்க தெரியாத 5 லட்சத்து 33,100 பேருக்கு அடிப்படை கல்வியறிவு கல்வி வழங்க திட்டமிடப்பட்டு பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவு இல்லாதவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் நடவடிக்கைகள், கடந்த ஜூலை மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, முழு எழுத்தறிவு பெற்ற பஞ்சாயத்து என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் என, அனைத்து நகர, கிராம ஊராட்சிகளிலும், அக்.,2-ல் நடக்கும் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.
மேலும் இது தொடர்பான சுருக்க அறிக்கையை அக்டோபர் 30-ம் தேதிக்குள் இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.