சென்னை: புதுமைப் பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், உயர்கல்வியில் சேரும் பெண் குழந்தைகளும் மாதம் ரூ.1,000 பெற கல்லூரி மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெண் கல்வியை ஊக்குவிக்கவும், மாணவிகள் உயர்கல்வியில் சேர்வதை ஊக்குவிக்கவும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கியுள்ள `புதுமைப் பெண்’ திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும், உயர்கல்வி முடியும் வரை, அவர்களின் வங்கிக் கணக்கில், சமூக நலத்துறை மூலம், மாதம், 1,000 ரூபாய் நேரடியாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் சென்னை மாவட்டத்தில் 11,015 மாணவிகள் மாதம் ரூ.1,000 பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு வரை அரசு பள்ளி மாணவிகள் மட்டுமே பயன்பெற்று வந்தனர்.
இந்நிலையில், 2024-25ம் கல்வியாண்டு முதல், அரசு உதவி பெறும் பள்ளிகளில், 6 முதல், 12ம் வகுப்பு வரை, தமிழ் வழியில் படித்த பெண்கள் பயன்பெறும் வகையில், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் உயர்கல்வி முடியும் வரை மாதந்தோறும் ரூ.1,000 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
எனவே, சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்று, உயர்கல்வி படிக்கும் மாணவிகள், ‘புதுமைப் பெண்’ திட்டத்தில் பயன்பெற, அந்தந்த கல்லுாரி சிறப்பு அலுவலர் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.