சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்திலிருந்து 400 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 510 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 590 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்நிலையில் இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் கனமழை தொடரும். சென்னை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது (ரெட் அலர்ட்), ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கொடைக்கானல், அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை பல்கலைக்கழக தேர்வுகளும் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 80 கி.மீ., வேகத்தில் மணிக்கு 90 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், உடனடியாக கரைக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.