சென்னை: ஆசிரியர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது மிகவும் அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு வலியுறுத்தினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் கருத்தரங்கு, சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்தது. இயக்கத்தின் மாநிலத் தலைவர் டி.திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.
இக்கருத்தரங்கில் எழுத்தாளர் எஸ்.மோசஸ் பிரபு எழுதிய ‘நரேந்திர தபோல்கர் – மூடநம்பிக்கை ஒழிப்பாளர்’ ஆயிஷா இரா. நடராசன் எழுதிய ‘அறிவியல் குழந்தைகள்’ புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இவ்விரு புத்தகங்களை வெளியிட்டு ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு பேசியதாவது: பள்ளி பாடப்புத்தகங்களில் அறிவியல் பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க எதையும் செய்வதில்லை.
இதற்கு காரணம் ஆசிரியர்களுக்கு அறிவியல் சிந்தனை இல்லை. முன்னேறிய சமுதாயம் உருவாக வேண்டுமானால் முதலில் ஆசிரியர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் இது மிகவும் அவசியமானது என்றார்.
இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் நரேந்திர நாயக் கூறுகையில், “மக்களிடம் அறிவியல் உணர்வை வளர்க்கவும், மூடநம்பிக்கைகளை அகற்றவும் செய்த முயற்சிகளுக்காக நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்டார். ஆனால், அவரது இயக்கம் அழியவில்லை. மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவிலும் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும்,” என்றார்.
கல்வியாளர் எஸ்.கிருஷ்ணசாமி அறிவியல் மனப்பான்மை பிரகடனம் குறித்து பேசினார். எஸ்.ஆர். சேதுராமன் தமிழ்நாட்டில் மூடநம்பிக்கைகள் பற்றிய ஆய்வுத் தொகுப்பை வெளியிட்டார். விழாவில் எஸ்.சுப்ரமணி, எம்.சுதாகர், எம்.சசிகுமார், வி.அம்பிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.