தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரை பகுதியில் உள்ள கடைகளில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் வேல்முருகன் தலைமையிலான அதிகாரிகள் ஏரிப்புறக்கரை கிராமத்திற்கு சென்று அங்குள்ள கடைகளில் அதிரடியாக சோதனையிட்டனர்.
அப்போது சசிகுமார் மற்றும் கோதண்டபாணி ஆகியோரது 2 கடைகளில் குட்கா, பான் மசாலா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், 2 கடைகளையும் தற்காலிகமாக இழுத்துப்பூட்டினர்.
மேலும் கடைகளின் உரிமையாளர் இருவருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் கடைகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.