டெல்லி: மேம்பாலம் கட்டும் பணியின் போது கண்டிப்பாக பாதுகாப்பு சோதனை நடத்த வேண்டும் என ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கு புல்லட் ரயில் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24-ம் தேதி அகமதாபாத் அருகே கட்டுமான பணியின் போது கிரேன் வழுக்கி அருகில் உள்ள ரயில் பாதையில் விழுந்து ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதை மனதில் வைத்து ரயில்வே வாரியம் பாதுகாப்பு தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. சமீபத்தில் மேற்கு ரயில்வேயில் கர்டர் அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தையும் ரயில்வே வாரியம் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. சாலை மேம்பாலங்கள் கட்டும் பணியின் போது விரிவான பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கிரேன்கள் மற்றும் சஸ்பெண்ட் கிரேன்களின் தாங்கும் திறனை ஆய்வு செய்ய வேண்டும். அடுத்த 10 நாட்களுக்குள் ஏதேனும் மேம்பால கர்டர் அமைக்க வேண்டும் என்றால், அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.