அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த சில நாட்களாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரைத் தவிர்த்து பேசுவதை நிறுத்தியிருந்தது கவனிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டபோது, அங்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இல்லாததைத் தொடர்ந்து, இருவருக்குள் பார்வை வேறுபாடு உள்ளது என்ற செய்தி பரவியது.

அதன்பின் பல நிகழ்ச்சிகளில் எடப்பாடி பெயரைச் சொல்லாமலேயே உரையாற்றிய செங்கோட்டையன், ஒரு கட்டத்தில் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை தனிப்பட்ட முறையில் சந்தித்தது, பாஜக – அதிமுக கூட்டணிக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விகளையும் எழுப்பியது.
ஆனால், அமித்ஷா சென்னை வந்தபோது, பாஜக – அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், செங்கோட்டையனும் அதற்குள் சமரசமாக இணைந்தார் என்பதே அரசியல் வட்டாரத்தின் நம்பிக்கை. இதனைத் தொடர்ந்து ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசும்போது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்ததாக புகழ்ந்து பேசினார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் நடத்தப்பட்ட விருந்தில் செங்கோட்டையன் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தவிர்த்ததைக் கருத்தில் கொண்டு, மறுமுறையாக இருவருக்குள் தூரம் இருப்பதாகச் செய்திகள் மீண்டும் கிளம்பின.
ஆனால் இன்று அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்றதை வைத்து, அனைத்தும் இயல்புநிலையில் திரும்பியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.