நெல்லை: நெல்லை உடையார்பட்டி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுநீர் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். தாமிரபரணி ஆறு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 82 ஆயிரம் ஏக்கர் பாசன வசதியை வழங்குகிறது. சமீப காலமாக தாமிரபரணியில் தொழிற்சாலை கழிவுகள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மனித கழிவுகளின் அளவு அதிகரித்து வருகிறது.
நெல்லை மாநகர பகுதியில் குச்சத்துறை, மீனாட்சிபுரம், மேலநத்தம், வண்ணார்பேட்டை, சிந்துபுந்துறை, கொக்கிரகுளம், உடையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தாமிரபரணியில் கலந்து தண்ணீர் மாசுபடுகிறது. தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதைத் தடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு நெல்லையில் தாமிரபரணி ஆற்றிலும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் தற்போது உடையார்பட்டி தாமிரபரணி ஆற்றில் மீண்டும் கழிவுநீர் கலக்கிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. ஆற்றில் குளிக்கச் செல்பவர்கள் மூக்கைப் பிடிக்க வேண்டிய கட்டாயம். எனவே கழிவுநீர் கலப்பதை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், மாநகராட்சியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.