சென்னை: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் சூழல் களைகட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக), இன்று திடீரென தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இருந்து விலகுவதாக அறிவித்தது.

அதிமுகவும் பாஜகவும் சமீபத்தில் மீண்டும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வந்தன. இதன் மூலம் திமுக கூட்டணியில் இருந்து கட்சிகளை தங்களுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், இந்த கூட்டணியில் அமமுக இருப்பது குறித்த சந்தேகங்கள் சில நாட்களாகவே நிலவி வந்தன.
இன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற டிடிவி தினகரன், ஊடகங்களிடம் பேசியபோது, “தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி அமமுக இல்லை. எங்களின் கூட்டணி நிலைப்பாடு குறித்து டிசம்பரில் அறிவிப்போம்” என கூறினார். மேலும், அமித்ஷா எடுத்த அதிமுக – அமமுக இணைப்பு முயற்சி தோல்வியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் அணியின் விலகலுக்கு பின், அமமுக வெளியேறியிருப்பது பாஜக – அதிமுக கூட்டணிக்கு பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது. தினகரனின் இந்த முடிவு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் கணக்கீட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கக்கூடியதாகும்.