சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 1,299 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஜூன் 28-29 தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சீருடைப் பணிகள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. சீனியாரிட்டி தொடர்பான சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி இந்த ஒத்திவைப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணிகள் தேர்வு வாரியம் 1,299 காவல் உதவி ஆய்வாளர் காலியிடங்களை நிரப்ப கடந்த மாதம் 4-ம் தேதி அறிவிப்பை வெளியிட்டது.
இந்தத் தேர்வுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். காலியாக உள்ள பணியிடங்களில் 20% ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கும், 80% பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. பணியில் உள்ள காவலர்களுக்கு எழுத்துத் தேர்வு மட்டுமே நடத்தப்படும் என்றும், உடல் தகுதித் தேர்வு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பிரிவில் வருபவர்களுக்கு எழுத்துத் தேர்வுடன் உடல் தகுதித் தேர்வும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண்களின் அடிப்படையில் பணிமூப்பு இருக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, 20% ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்படும் காவல்துறை அதிகாரிகளுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதால், ஜூன் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த எஸ்.ஐ தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.