சென்னை: சென்னையில் தூய்மை பணியாளர்கள் நடத்திய போராட்டத்திற்கு நேரில் வந்து பாடகி சின்மயி ஆதரவு தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கியதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 6வது நாளாக அவர்கள் நடத்திய போராட்டத்தால் நகரின் பல இடங்களில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
இந்நிலையில், நேற்று சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். ரிப்பன் மாளிகையின் முன்னால் போராடிக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு அவசரமாக தண்ணீர் தேவைப்பட்ட நிலையில், பாடகி சின்மயி 500 லிட்டர் தண்ணீர் பாட்டில்களை வாங்கிக் கொண்டு தூய்மைப்பணியாளர்கள் போராடும் பகுதிக்கு வந்தார்.
தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், தங்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும் என்ற தூய்மை பணியாளர்களின் கோரிக்கைக்கு சின்மயி ஆதரவு தெரிவித்தார்.