சிவகங்கை: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு சிவகங்கை அரசு மருத்துவமனை டாக்டர்கள் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்த மக்கள் சிரமப்பட்டனர்.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலையில் நீதி கேட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 18 அரசு மருத்துவமனைகள், 52 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் நேற்று கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அரசு மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் டாக்டர்கள் தங்கும் இடங்களில் போதிய வசதிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய மருத்துவர் மற்றும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தப்பட்டது.