கடலூர்: சென்னை மெரினா கடற்கரைக்கு அடுத்தபடியாக கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் 2-வது பெரிய கடற்கரையாகும். அவ்வப்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் கடல் அலை அதிகரிப்பால் அந்த பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நடைமேடை பகுதியும், தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட கூம்பு வடிவ கூண்டும் தற்போது தென்படுகிறது.
மேலும், மண் அரிப்பு காரணமாக தற்போது கடல் அலைகள் பொதுமக்கள் அமரும் பகுதிக்கு வந்து செல்கின்றன. கடலில் சுமார் 250 மீட்டர் தூரத்துக்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடற்கரை மணலில் அமர பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதே நிலை நீடித்தால் கடல்நீர் ஊருக்குள் புகுந்து சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வெள்ளி கடற்கரையை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. எனவே கடல் சீற்றத்தால் ஏற்படும் மண் அரிப்பை தடுக்க கடற்கரையை சுற்றிலும் கற்கள் கொட்டும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.