தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை சார்பில் சிறப்பு ஆய்வரங்கம் நடைபெற்றது.
இதில், சிறப்பு ஆய்வுரை வழங்கிய, பல்கலைக்கழக துணைவேந்தரும், மொழியியல் பேராசிரியருமான முனைவர் வி. திருவள்ளுவன் பேசியதாவது:
“மனிதன் தன் உணர்வுகளைத் தொடர்பு படுத்த உதவும் மொழிக்கூறுகள், நரம்பு மண்டலம் மற்றும் மூளை ஆகியவற்றின் கூட்டிணைவில் செயலாற்றும் இயக்கம். மனித மூளையானது பில்லியன் கணக்கான நியூரான்களின் துணையுடன் இயங்குகிறது.
நாள்தோறும் மனிதமூளை புதிய நியூரான்களை உருவாக்குகிறது. அதில், மனித உடலின் செயலாக்கத்திற்கு 12 நரம்புகள் மிக முக்கியத் துணையாக நின்று உதவுகின்றன. மனித மூளையின் நடவடிக்கைகளை நிர்ணயிக்கும் பெருமண்டலமாக நரம்பியல் விளங்குகிறது” என்றார்.
நரம்பு மொழியியல் என்னும் தலைப்பில் 25 ஆண்டுகளுக்கு முன், தமிழ் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் மேற்கொண்ட முதல் ஆய்வாளர் பேராசிரியர் வி. திருவள்ளுவன் என்பது குறிப்பிடத்தக்கது. அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறைத் தலைவர் இரா. குறிஞ்சிவேந்தன், கலைப்புல முதன்மையர் பெ. இளையாபிள்ளை, மூத்த மொழியியல் பேராசிரியர் நடராசப்பிள்ளை உள்ளிட்டோர், பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை ஆய்வு மாணவர் க. இலக்கியா வரவேற்றார். நிகழ்வின் நிறைவில் ஆய்வு மாணவர் கி. பிருதிவிராஜ் நன்றி கூறினார்.