சென்னை: இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ரமலான் நோன்பு. இஸ்லாமியர்கள் பொதுவாக ரமலான் மாதத்தின் 30 நாட்களும் நோன்பு நோற்பார்கள். ஷவ்வால் மாதம் 29-ம் தேதி வானில் தோன்றும் பிறையுடன் ரமலான் நோன்பு தொடங்கும். பிறை தென்படாத பட்சத்தில் மறுநாள் விரதம் தொடங்கும். இந்நிலையில் நேற்று ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை தரிசனம் செய்யப்பட்டது. அதன்படி இன்று முதல் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமையக தலைவர் காஜி தாவூத் கைசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பல பகுதிகளில் நேற்று பிறை தென்பட்டது. எனவே, தமிழகத்தில் வரும் இன்று முதல் புனித ரமலான் நோன்பு துவங்குகிறது” என்றார். அந்த வகையில் இன்று அதிகாலை 4 மணிக்கு உணவருந்தி இஸ்லாமியர்கள் நோன்பை தொடங்கினர். தமிழகம் முழுவதும் ரம்ஜான் நோன்பு தொடங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இந்த மாதம் முழுவதும் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபடுவார்கள். இந்த புனித மாதத்தில், முஸ்லிம்கள் தொண்டு என்று அழைக்கப்படும் ஜகாத்தில் ஈடுபடுவார்கள். திருக்குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளிலும் ஈடுபடுவார்கள். ஒரு மாத நோன்பின் முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். 30 நாட்களுக்கு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகளும், மாலையில் நோன்பு கஞ்சியும் வழங்கப்படும். 30-ம் நாள் முடிவில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள்.