சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி, செங்கல்பட்டு இடையே இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை துவங்கி உள்ளது. தீபாவளி பண்டிகையின்போது ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பல்வேறு வழித்தடங்களில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி, செங்கல்பட்டு இடையே வாரம் இருமுறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன்படி, தீபாவளி பண்டிக்கைக்கு மறுநாளான அக்டோபர் 21-ம் தேதி மற்றும் அக்டோபர் 22 -ம் தேதி, அதிகாலை 4 மணியளவில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் அதிவேக சிறப்பு ரயில் (ரயில் எண்: 06156) அதே நாள்களில் மதியம் 1:15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.
மறுமார்க்கத்தில், குறிப்பிட்ட இரு தினங்களில் (அக்.21, அக்.22) செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (ரயில் எம்: 06155) நள்ளிரவு 11:55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (அக்.12) காலை 8 மணியளவில் துவங்கியுள்ளது என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.