சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் ரயில் உட்பட 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரயில்வே நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாவது:-
சிறப்பு ரயில் (06075) இன்று இரவு 10.15 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு, நாளை பிற்பகல் 2.05 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு நிலையத்தை அடையும். எதிர் திசையில், சிறப்பு ரயில் (06076) அக்டோபர் 5-ம் தேதி மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு நிலையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூரை அடையும்.

தாம்பரம் – செங்கோட்டை திட்டமிடப்படாத சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (06013) இன்று மாலை 4.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கோட்டையை அடையும். மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06161) இன்று இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு மதுரையை வந்தடையும்.
இது தவிர, யஷ்வந்த்பூர் – மங்களூர் சந்திப்பு இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு மற்றும் சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் வடக்கு நிலையம் இடையேயான சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு சிறப்பு ரயில்களும் முன்கூட்டியே முன்பதிவு செய்யப்படாத ரயில்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.