ஸ்ரீவில்லிபுத்தூர்: தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் இன்று காலை 6 மணி முதல் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சாப்டூர் வனச்சரகத்தில், கடல் மட்டத்தில் இருந்து 4500 அடி உயரத்தில், சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தகிரி ஆகிய 4 மலைகளுக்கு இடையே சஞ்சீவிகிரி எனப்படும் சதுரகிரி உள்ளது.
இதன் காரணமாக சதுரகிரி பஞ்சபூத லிங்கத்தலம் என போற்றப்படுகிறது. சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, ஆனந்த வள்ளியம்மன், பிலாவடி கருப்பசாமி, சட்டநாத முனி குகை, 18 சித்தர்கள் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. அகஸ்தியர், போகர், கோரக்கர் உள்ளிட்ட 18 சித்தர்கள் இங்கு தவம் செய்துள்ளதாகவும், இன்றும் சதுரகிரி மலையில் சித்தர்கள் உருவமற்ற நிலையில் தவம் செய்து வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். சதுரகிரி மலைக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய 8 நாட்களில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை, நவராத்திரி, மகா சிவராத்திரி போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி இறைவனை தரிசனம் செய்வது வழக்கம். இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களான கேதார்நாத், அமர்நாத் போன்ற சிவாலயங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், தமிழகத்தில் உள்ள வெள்ளையங்கிரி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஜனவரி 27 முதல் 30-ம் தேதி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் வசதிக்காக மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சதுரகிரி மலையடிவாரமான வத்திராயிருப்பில் உள்ள தாணிப்பாறைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள வனத்துறை நுழைவு வாயில் முன் நள்ளிரவு முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பனிமூட்டம் காரணமாக காலை 6 மணிக்கு மேல் வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயிலில் சுவாமிக்கு 18 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.