கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை தொடர்ந்து மாலை மற்றும் இரவில் பெய்து வருவதால் சுருளி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக வறண்டு கிடந்த சுருளி அருவியில் தற்போது அதிகளவு தண்ணீர் வரத்து உள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுருளி அருவி கம்பத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சுருளி நீர்வீழ்ச்சியில் பல புனித இடங்கள் இருப்பதால், ஆண்டு முழுவதும் ஆன்மீக பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் சுருளி அருவிக்கு வருகை தருகின்றனர். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக மேகமலை, தூவாணம் அணை, சுருளி அருவிக்கு தண்ணீர் வர வேண்டிய ஈத்தக்காடு அரிசிப்பாறை ஆகிய பகுதிகளில் மழை பெய்யாததால், சுருளி அருவி தண்ணீர் வராமல் வெறும் பாறைகளாக காட்சியளித்தது.
இந்நிலையில், சுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான மேகமலை, தூவாணம் அணைக்கட்டு பகுதிகளிலும், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால், நேற்று சுருளி அருவியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. இதையும் மீறி சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சுருளி அருவியில் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர்.