ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசுக்குச் சொந்தமானதாக மாற்றப்படும் சம்பவங்கள் வழக்கமான நிகழ்வாகி வருகின்றன.
இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், 4 மீனவர்களைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மோட்டார் படகையும் பறிமுதல் செய்தனர்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை நாளுக்கு நாள் கைது செய்து வரும் நிலையில், மீண்டும் மீனவர்களைக் கைது செய்யும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது ஏழை மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மோசமாகப் பாதித்துள்ளது.
இந்த சிக்கலான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதில் பிரதமர் மோடி நேரடி கவனம் செலுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீன்பிடி உபகரணங்களுடன் விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,’ என்று சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பிரதமரிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.