நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார், சக மீனவர்கள் 4 பேருடன் கடந்த 8-ம் தேதி காலை மீன் பிடிக்க ஃபைபர் படகில் கடலுக்குச் சென்றார்.
அப்போது அங்கு 2 ஃபைபர் படகுகளில் வந்த இலங்கையை சேர்ந்த 9 கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டி வலைகள் மற்றும் உபகரணங்களை எடுத்து சென்றனர்.
காயமடைந்த 5 மீனவர்களும் நேற்று காலை சேரூர் மீன் இறங்கு தளத்துக்கு வந்தனர். இதேபோல் கோபால் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்ற செல்லையன் உள்ளிட்ட 5 மீனவர்களையும், மகேஸ்வரிக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்ற செல்வம் உள்பட 4 மீனவர்களையும், சத்தியசீலன் படகில் மீன்பிடிக்க சென்ற விஜயன் உள்பட 4 மீனவர்களையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர்.
மேலும் அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 800 கிலோ மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் உள்ளிட்ட உபகரணங்களை கடற்கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர்.
காயம் அடைந்த மீனவர்கள் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து கீழையூர் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது படகில் இருந்த 5 மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள், படகில் இருந்த 200 கிலோ வலைகள், 50 கிலோ மீன்களை பறித்து சென்றனர்.
பின்னர் கரை திரும்பிய மீனவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்ற நிலையில் தற்போது மீண்டும் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது சக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.