சென்னை: இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பேசுகையில், “பொதுவாக எனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடுவதில்லை. ஆனால், திமுகவினர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, அரசின் சாதனைகள் மற்றும் கட்சியின் கொள்கைகளை விளக்கி பொதுக்கூட்டம் நடத்துவது போன்றவற்றை செய்கிறார்கள். இம்முறை எனது பிறந்தநாள் வேண்டுகோளாக எனது வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள திமுகவினருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.
இன்று தமிழகம் தனது வாழ்வியல் பிரச்சினை, மொழிப்போர், உரிமைப் பிரச்சினை, தொகுதி மறுசீரமைப்பு போன்றவற்றை எதிர்கொண்டுள்ளது. இதன் உண்மையான நோக்கத்தை மக்களிடம் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். தொகுதி மறுசீரமைப்பு நமது மாநிலத்தின் சுயமரியாதை, சமூக நீதி மற்றும் நமது சமூக நலத்திட்டங்களை பெரிதும் பாதிக்கும். இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அரசை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும். இந்தியாவுக்கே வழிகாட்டியாக போராட்டத்தை தொடங்கினோம்.
தற்போது, கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து ஆதரவுக் குரல்கள் எழுந்துள்ளன. இதைப் பார்க்கும் மத்திய அரசு, இந்தியைத் திணிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே இதை அடையத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்காததால், இதுவரை எங்களுக்கு எந்த நிதியும் வழங்கவில்லை.
அதேபோல், “தமிழ்நாட்டுக்கு தொகுதிகளை குறைக்க மாட்டோம்” என்று மட்டும் சொல்கிறார்களே தவிர, மற்ற மாநிலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாட்டோம் என்று சொல்லவில்லை! நாங்கள் கேட்பது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரிக்காதீர்கள்! நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களைத் தண்டிக்காதே! அப்படி நடந்தால் தமிழகமும் திமுகவும் ஒருபோதும் ஏற்காது! நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும். “தமிழகத்தின் நலனையும், எதிர்காலத்தையும் யாருக்காகவும், எதற்காகவும் தியாகம் செய்ய மாட்டோம். ஒன்றுபட்டு தமிழகத்திற்காக போராட வேண்டும்! தமிழகம் போராடும்! தமிழகம் வெல்லும்!” என்று செயல்தலைவர் ஸ்டாலின் கூறினார்.