தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாட்கள் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று மாலை அவர் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையம் முதல் அவிநாசி சாலை வரை அவர் சாலை வலம் சென்றார். அந்த வழித்தடத்தில் பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.

மேள தாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைக்கு புறப்பட்டார். அங்கு இன்று இரவு தங்கவுள்ளார். நாளை காலை 10 மணிக்கு உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அங்கிருந்து கட்சி அலுவலகத்திற்குச் செல்வார். பின்னர் மதியம் பொள்ளாச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அதன் பின் கோவை திரும்பி விமானம் மூலம் சென்னை பயணம் மேற்கொள்கிறார். முதல்வர் பயணிக்கும் வழித்தடங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் சில பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. கருமத்தம்பட்டி மற்றும் தென்னம்பாளையம் பகுதிகளில் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் சற்று சிரமம் அனுபவித்தனர். இருந்தாலும் முதல்வரை நேரில் பார்க்கும் மகிழ்ச்சியில் மக்கள் உற்சாகமாக இருந்தனர்.