கோவையில் நடைபெறும் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று புதிய உயிர் ஊட்டியுள்ளார். அவினாசியில் 10.1 கிலோமீட்டர் நீள உயர்மட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின் மூன்றாவது பெரிய மேம்பாலமாகும். இதன் மூலம் நகரப் போக்குவரத்து நெரிசல் குறைந்து, மக்கள் சில நிமிடங்களில் முக்கிய பகுதிகளுக்கு சென்று சேர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து கொடிசியா அரங்கில் நடைபெற்ற உலக புத்தொழில் மாநாட்டை முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் 42 நாடுகளைச் சேர்ந்த 300 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஸ்டாலின் பேசியபோது, தமிழ்நாடு தற்போது புத்தொழில் துறையில் முன்னணியில் இருப்பதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளில் ஆறு மடங்கு நிறுவனங்கள் மாநிலத்தில் உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார். திராவிட மாடல் அரசின் நோக்கம் தமிழ்நாட்டை உலகின் தலைசிறந்த தொழில் மையமாக மாற்றுவதே என அவர் வலியுறுத்தினார்.
மேலும் அடுத்த மாதம் ரூ.175 கோடி மதிப்பில் கட்டப்பட்ட செம்மொழி பூங்கா திறக்கப்படும் என்றும், விரைவில் பெரியார் நூலகம் மற்றும் கோவை கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டி முடித்து திறக்கப்படும் என்றும் அறிவித்தார். இது கோவையின் கல்வி, விளையாட்டு, கலாச்சார துறைகளுக்கு புதிய அடையாளமாக அமையும் என அவர் கூறினார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், கோவையில் திமுக அரசு தொடர் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. கடந்த தேர்தலில் திமுக ஒரு தொகுதியையும் வெல்ல முடியாத கோவையில், இம்முறை குறைந்தபட்சம் ஐந்து தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். இதற்காக கோவைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை திறந்து வைப்பது அரசியல் ரீதியாகவும் முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.