சென்னை: திமுகவின் சட்டப்பேரவை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகத்தை சீரமைப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுகஒருங்கிணைப்புக் குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இக்குழுவில்,திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் அண்ணா அறிவா லயத்தில் நடைபெற்றது. நேற்றும்தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ளவர்களை ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவில்லை. ஆனால், அமைச்சர் பொன்முடி சந்திப்பில் உடன் இருந்தார். இந்த சந்திப்பின்போது, மாவட்டங்கள் பிரிப்பு, புதிய மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம், பொதுமக்களிடம் கருத்து கேட்பது, அவர்கள்எண்ண ஓட்டங்களை அறிந்து அதன்படி திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ஜூலை 26-ம் தேதி டெல்லி தமிழ்நாடு இல்லத்துக்கான புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் முதல்வர் மறுநாள் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்நிலையில், நேற்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுடன், நிதி ஆயோக் கூட்டம் தொடர்பாகவும் முதல்வர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.