பீஹாரில் இண்டி கூட்டணி பெறப்போகும் வெற்றியை தடுக்க பாஜ முயற்சி செய்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என்றும் அவர் விமர்சித்தார். பீஹாரில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட ஸ்டாலின், மக்கள் சக்தியே ஜனநாயகத்தின் முதுகெலும்பு என்பதை வலியுறுத்தினார். கருணாநிதி – லாலு பிரசாத் நட்பை நினைவுகூர்ந்த அவர், தேஜஸ்வி யாதவ் மற்றும் ராகுல் காந்தியின் அரசியல் பங்களிப்பை பாராட்டினார். இந்தியாவில் ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்தால், அதற்கான போர்க்குரலை எழுப்புவது பீஹார் மக்களின் பாரம்பரியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்டாலின் தனது உரையில், தேர்தல் ஆணையம் 65 லட்சம் மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை என கூறினார். வாக்குரிமையை பறிப்பது பயங்கரவாதத்தை விட மோசமானது என்றும், பாஜ அதிகார துஷ்பிரயோகம் செய்து மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதாகவும் குற்றம் சாட்டினார். ராகுல் காந்தி தேர்தல் ஆணைய மோசடிகளை வெளிக்காட்டியதால் பாஜ அவரை குறிவைத்து தாக்குகிறது என்றும் அவர் விளக்கினார்.
அதேவேளை, பீஹார் சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணியின் வெற்றி உறுதி எனவும், அந்த வெற்றியே நாடு முழுவதும் ஜனநாயகத்தை காப்பாற்றும் வலிமையாக இருக்கும் எனவும் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். மக்கள் சக்திக்கு முன் எப்படிப்பட்ட சர்வாதிகாரமும் நிலைக்க முடியாது எனவும், பீஹார் மீண்டும் அதை நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஸ்டாலின், பீஹார் சட்டசபை தேர்தலுக்குப் பின் நடைபெறும் வெற்றிவிழாவில் தானும் பங்கேற்பேன் என அறிவித்தார். தமிழில் அவர் பேசிய உரை ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.