தமிழக சட்டசபை தேர்தல் அணுகும் வேகத்தில், மாநிலத்தின் மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் — மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழ் வெற்றிக் கழகத் தலைவர் விஜய் — தங்களது தேர்தல் முயற்சிகளை ஒரே நேரத்தில் தொடங்கியுள்ளனர்.
ஸ்டாலின் – “ஓரணியில் தமிழ்நாடு” பிரச்சாரம்
திமுக முதல்வர் ஸ்டாலின், “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையை தாண்டி, தமிழக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக 45 நாள் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். கடந்த வாரம் ஆழ்வார்பேட்டையில் மக்கள் சந்திப்புடன் தனது பிரச்சாரத்தை தொடங்கிய அவர், சாதி, மதம், கட்சி பேதமின்றி ஒவ்வொரு வீட்டிலும் சென்று தமிழர் ஒற்றுமையை வலியுறுத்தும் திட்டத்தை செயல்படுத்தச் சொல்லியுள்ளார்.

விஜய் – தவெகவின் சுற்றுப்பயணத் திட்டம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சியின் செயற்குழு முடிவுப்படி செப்டம்பர் மாதம் மாநிலமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணம் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதியன்று தஞ்சாவூரில் இருந்து தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்கிரவாண்டி மாநாட்டை தொடர்ந்து, இது அவரது நேரடி மக்கள்சந்திப்பு அரசியல் பயணத்திற்கு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி – “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்”
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவையில் தனது மாநில சுற்றுப்பயணத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளார். 234 தொகுதிகளிலும் மக்களை நேரில் சந்தித்து ஆதரவை உறுதி செய்யும் இந்தப் பயணம், “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் நடைபெறுகிறது. பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் இதில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
மூவரும் மக்கள் மனதில் இடம் பிடிக்க போராடும் வேளையில், 2026 தேர்தல் தற்காலிக மோதல் அல்ல, முக்கியமான மாற்றத்தை உருவாக்கக்கூடிய அரசியல் போராக மாறியுள்ளது.