ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற விவகாரம் தேசிய அரசியலில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. மத்திய பாஜக அரசு, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இந்தத் திட்டத்தின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இதன் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் 2029 லோக்சபா தேர்தலுக்கு முன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் பல்வேறு கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இதில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும், மாநிலங்களின் குரல்களை நசுக்கும் முயற்சி என்றும் தனது எக்ஸ் (புதிய ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார். “இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை முழு பலத்துடன் தடுத்து நிறுத்துவோம்” என்று உறுதியளித்தார்.
நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி வரை நடக்கிறது, இதில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கடும் எதிர்ப்பை பதிவு செய்ய வாய்ப்புள்ளது.