மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இப்ராகிம் (36), யூசுப் (35), அஸ்ரப் (40) ஆகியோர் சுற்றுலா பயணிகளாக வந்திருந்தனர். அவர்களிடம் பெரிய அட்டைப் பெட்டிகள் இருந்தன. அவற்றில் என்ன இருக்கிறது என அதிகாரிகள் கேட்டதற்கு, ‘அரிசி, சமையல் பொருட்கள் உள்ளன’ என்றனர். ஆனால் சோதனை நடந்து கொண்டிருந்த போது, அட்டைப் பெட்டிகள் லேசாக குலுங்கின. சந்தேகமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அட்டைப் பெட்டிகளை திறந்து பார்த்தபோது, 780 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரும் தங்களது விமானங்களை ரத்து செய்துவிட்டு தங்களுடைய நட்சத்திர ஆமைகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து 3 பேருக்கு சொந்தமான 780 நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் இந்த நட்சத்திர ஆமைகள் சதுப்பு நிலப்பகுதிகளில் இருந்து பிடிக்கப்பட்டு மலேசியாவிற்கு கடத்தப்படுவதும், இந்த நட்சத்திர ஆமைகளின் சர்வதேச மதிப்பு ரூ.15 லட்சம் என்பதும் தெரியவந்தது. பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை கிண்டி சிறுவர் பூங்கா அல்லது வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இந்நிலையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தனியார் பயணிகள் விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த பயணி ஒருவரின் உடைமைகளில் மறைத்து வைத்திருந்த 1,500 இ-சிகரெட்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.37 லட்சம். இதையடுத்து, அந்த இ-சிகரெட்டுகளை பறிமுதல் செய்து, பயணியை பிடித்து விசாரித்தனர். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட சோதனையில் ரூ. மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான நட்சத்திர ஆமைகள், ரூ.37 லட்சம் மதிப்பிலான இ-சிகரெட் உள்ளிட்ட ரூ.52 லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.