சென்னை: மெட்ரோ ரயில் பயணத்தில் பயன்படுத்துவதற்காக சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டு 2023-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாநகரப் பேருந்துகளில் இந்த அட்டையைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.சி.சிவசங்கர் ஜனவரி 6-ம் தேதி தொடங்கி வைத்தார். சிங்கார சென்னை பயண அட்டை சென்னையில் உள்ள முக்கிய நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு பயணிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த கார்டு தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகத்திடம் பயணிகள் சமூக வலைதளங்கள் மூலம் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். அவர்கள் கூறுகையில், “கோயம்பேடு பஸ் நிலையத்தில் காலை 10 மணி முதல் சிங்கார சென்னை பயண அட்டை விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலான பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்கு காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே வருகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு விற்பனை நேரத்தை மாற்ற வேண்டும். இதேபோல், என்எப்சி வசதி உள்ள செல்போன்களில் சென்னை பஸ் ஆப் மூலம் சிங்கார சென்னை கார்டு இருப்பு உள்ளதா என சரிபார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு பதிலளித்த மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் த.பிரபுசங்கர், “சிங்கார சென்னை விற்பனை மையத்தின் நேரம் குறித்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், கார்டு தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறோம். முதன்மையானது பயணிகள் இருப்புநிலையை சரிபார்க்க வேண்டும். அதன்படி, என்எப்சி வசதி கொண்ட செல்போன்களில் கார்டின் இருப்பை சரிபார்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் சில விற்பனையாளர்கள் மூலமாகவும் இந்த அட்டையை விநியோகிக்க ஏற்பாடு செய்து வருகிறோம்’’ என்றார்.