சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே பரந்தூர், நெல்வாய், நாகப்பட்டு, இடையர்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி, 5,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளன.
இத்திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஏகனாபுரத்தை மையமாக கொண்டு நடத்தப்படும் இந்த போராட்டம் 1000-வது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வந்தாலும், விமான நிலையம் அமைக்கும் முடிவில் அரசு உறுதியாக உள்ளது.

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விமான நிலையம் அமைக்க நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏகனாபுரம் கிராமத்தில் 1,000-வது நாள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏகனாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர் ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இந்த அமைப்பின் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பரந்தூர் விமான நிலையத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நீர்நிலைகளில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விளக்கினர்.