சென்னை: கடந்த மாதம் சென்னையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகமாகவும், சின்ன வெங்காயத்தின் விலை குறைவாகவும் இருந்தது. சமீபத்தில் பெய்த கனமழையால் தமிழகத்தில் பெரம்பலூர், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் அழுகியதால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால், சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது.
இதனால் தற்போது விலை உயர்ந்து வருகிறது. சின்ன வெங்காயம் நேற்று கிலோ ரூ. 80 முதல் ரூ. 100 ரூபாய் வரை விற்கிறது. இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:- தமிழகத்திற்கு தேவையான சின்ன வெங்காயம் நம் மாநிலத்தில் விளைகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.
அறுவடை டிசம்பர் முதல் மார்ச் வரை நடைபெறும். எந்த ஆண்டும் பருவமழை அதிகமாக பெய்தால் சின்ன வெங்காயம் அதிகளவில் அழுகி, சந்தைக்கு வரத்து குறையும். இதனால் விலையும் உயரும். அதேபோல் சின்ன வெங்காயத்தின் விலையும் தற்போது அதிகரித்துள்ளது. இன்னும் 10 நாட்களில் சின்ன வெங்காயத்தின் விலை குறையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.