சென்னை: சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் குகேஷ், நடப்பு சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம், 18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டைப் பெற்ற குகேஷ். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சாதனை படைத்த குகேஷுக்கு பாராட்டு விழா தமிழக முதல்வர் மு.க., ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில், குகேஷுக்கு சால்வை மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டதுடன், தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி பரிசுத் தொகைக்கான காசோலையும் வழங்கப்பட்டது. மேலும், சாம்பியன்ஷிப் மூலம் குகேஷ் பெற்ற வருமானம் ரூ.11.34 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய வருமான வரிச் சட்டத்தின்படி, குகேஷ் பெறும் பரிசுத் தொகைக்கு ரூ.4 கோடி வரை வரி செலுத்த வேண்டும். இந்த வரிவிதிப்பு முறை விமர்சிக்கப்பட்டது.
எனவே, விளையாட்டுப் போட்டிகளில் பரிசுத் தொகை பெறும் வீரர்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி சுதா கடிதம் எழுதியுள்ளார். அதில், குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில், அவர் பெற்ற பரிசுத் தொகையில், 4 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்த வேண்டியுள்ளது.
கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசுகள் விளையாட்டு வீரர்களுக்கு வரிச்சலுகை வழங்கியது போல், குகேசுக்கும் வரிச்சலுகை அளித்தால், அது இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும். அதேபோல், குகேஷின் சாதனையை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசின் வழியில் மத்திய அரசு பரிசுத் தொகையை அறிவிக்க வேண்டும்.
நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் குகேஷின் சாதனையை பாராட்டி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன். உலக சாதனைக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.