மதுரை: மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அமலன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். நான் கடந்த 20 ஆண்டுகளாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன். எனக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கறிஞர் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. நான் எனது வழக்கறிஞர் அறைக்குச் சென்றபோது, என் பெயரில் ஒரு கடிதம் வந்தது. அதைப் படித்தபோது, ஊழல் தடுப்புத் துறைக்கு காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக நான் புகார் அளித்துள்ளதாகவும், அந்த புகாருக்கு நேரில் ஆஜராகுமாறு ஊழல் தடுப்புத் துறை அலுவலகத்தில் இருந்து எனக்கு சம்மன் வந்துள்ளதாகவும் தெரியவந்தது.
இதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். நான் அப்படி எந்த புகாரையும் பதிவு செய்யவில்லை. எனவே, இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அப்போதுதான், எனக்கு நடந்தது போல, ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு பல வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களின் பெயர்களில் போலி புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன என்பதையும், அந்த புகார்கள் குறித்து உரிய விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் எனக்குத் தெரியவந்தது.

மற்ற வழக்கறிஞர்களின் பெயர்களைப் பயன்படுத்தி இதுபோன்ற புகார்கள் வருவதால் மூத்த வழக்கறிஞர்கள் மிகுந்த அவமானத்தை எதிர்கொள்கின்றனர். தனிப்பட்ட விரோதமும் எழுகிறது. உயர் அதிகாரிகளின் நேரமும் வீணடிக்கப்படுகிறது. எனவே, மற்றவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி போலி புகார்களை அனுப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது.
“இந்த புகார் போன்ற பல புகார்கள் அரசு வழக்கறிஞர்கள் மீதும், அரசு வழக்கறிஞர்களின் பெயர்களைப் பயன்படுத்தியும் அனுப்பப்பட்டுள்ளன. இதே போன்ற புகார்கள் நீதிபதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருகிறது” என்று அரசு கூறியது. இதைத் தொடர்ந்து, “மற்றவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி போலி புகார்களை அனுப்புபவர்கள் மீது மதுரை மாநகர காவல் ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.