சென்னை: மருத்துவரின் பரிந்துரை சீட்டு மற்றும் விற்பனை ரசீது இல்லாமல் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்த 106 மருந்துக் கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் விற்கும் மருந்தகங்கள், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே விற்க வேண்டும்.
தாங்களாகவே வந்து மாத்திரை, மருந்து கேட்டால் பொதுமக்களுக்கு வழங்கக்கூடாது. விற்கப்படும் மாத்திரைகள் மற்றும் மருந்துகளுக்கு விற்பனை ரசீது வழங்க வேண்டும் என மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.
விதிமுறைகளை பின்பற்றாத மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 83 சில்லறை மருந்தகங்கள், 23 மொத்த மருந்தகங்கள் உட்பட 106 கடைகளின் உரிமங்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழகத்தில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து கடைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விதிமீறல் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அதன்படி, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்தல், விற்பனை ரசீது வழங்காதது, முறைகேடாக கருத்தடை மாத்திரைகள், கருத்தடை மாத்திரைகள் விற்பனை செய்த 106 கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கருத்தடை மாத்திரைகள் விற்பனை செய்த 8 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் திருப்பூரில் 3 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம், மதுரை, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விதிமீறல்கள் உள்ளன. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,” என்றார்.