சென்னை: கோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. மதுரை புதுநத்தம் சாலையில் நவீன கட்டுமான அம்சங்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை கடந்த ஆண்டு ஜூலை 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தற்போது மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நூலகம் செயல்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து திருச்சி மற்றும் கோவையில் கலைஞரின் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்று சட்டப்பிரிவு 110ன் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, கோவையில் கலைஞர் நூலகம் கட்டுவதற்காக கோவை காந்தி நகர் பேருந்து பணிமனைக்கு எதிர் திசையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நூலக கட்டுமான பணிகளை விரைவுபடுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்ட பொதுப்பணித்துறை டெண்டர் விடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள நிறுவனங்கள் அக்டோபர் 16-ம் தேதி மாலை 3 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத்தரம் வாய்ந்த புத்தகங்கள், பத்திரிக்கைகள், இதழ்கள் மற்றும் இணைய வளங்களைக் கொண்டிருக்கும் வகையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.