தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், தமிழ்நாடு நகை ஏலதாரர் நலச்சங்கம் கிளை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் ஏ.கே.சுரேஷ் தலைமை வகித்து பேசியதாவது,
பழைய நகைகளை வாங்கும் போது, நகையை விற்பனைக்காக கொண்டு வருபவர் அறிமுகமானவரா எனப்பார்க்க வேண்டும். நகை விற்க வருபவர்களிடம் ஆதார் அட்டை நகல் வாங்க வேண்டும்.
கணவன், மனைவி இருவரின் ஆதார் அட்டை நகலைப் பெற்று, சாட்சிக் கையெழுத்து பெற வேண்டும். பணத்தை ரொக்கமாக வழங்காமல், வங்கிப் பரிவர்த்தனை மூலம் கொடுக்க வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்களிடம் நகைகள் வாங்கக்கூடாது. நகைக்கடை முத்திரையை கவனித்து, நகை கொண்டு வருபவர்களிடம் நகையை ஏற்கனவே எங்கே வாங்கினீர்கள் எனக்கேட்டு உண்மைத் தன்மையை சரிபார்த்து வாங்க வேண்டும்.
அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு தவறான நபர்களிடம் நகை வாங்கக்கூடாது. பழைய நகைகளுக்கு 3 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்தி சட்டப்படி வாங்க வேண்டும். காவல்துறையினர் தவறான முறையில், வியாபாரிகளை மிரட்டினால் சங்கம் தலையிட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும். எனவே, வியாபாரிகள் பழைய நகைகளை வாங்கும் போது கவனமுடன் இருக்க வேண்டும்” என்றார்.
நிகழ்வில், பேராவூரணி கிளை புதிய தலைவராக எஸ்.சரவணன், செயலாளராக வெ.பழனியப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் மாநில கெளரவத்தலைவர் தஞ்சாவூர் வாசுதேவன் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நகை வியாபாரிகளை தொந்தரவு செய்த காவல்துறையினரை கண்டித்து, தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வியாபாரிகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், பட்டுக்கோட்டை சங்க நிர்வாகி சி.கோவிந்தராஜன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பி.மலர்வண்ணன் மற்றும் நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக ஆலங்குடி சீனிவாசன் நன்றி கூறினார்.