தமிழ் சினிமாவின் பிரமாண்ட நட்சத்திரங்களில் ஒருவர், நடிகர் விஜய், கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இந்தக் கட்சியின் கொடி மற்றும் பாடல் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது, அதன் பின்பு மாபெரும் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரியும் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. 33 நிபந்தனைகளுடன் இந்த மாநாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, மாநாடு நடைபெறவிருக்கும் இடத்தில் மழைநீர் தேங்கி சேரும் வாய்ப்பு உள்ளது. இதனால், பந்தல் மற்றும் மேடை அமைப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கிய நிலையில், 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் மழை பெய்யுமா என்ற கேள்வி தொண்டர்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், சென்னை வெதர் ராஜா ராமசாமி, தனது சமூக வலைப்பக்கத்தில், அந்த நாளில் மழை வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக முன்னறிவிப்பு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து மழை நிலவரத்தைப் பற்றி தகவல்களை பகிர்வதாகவும் கூறியுள்ளார். இதன் மூலம், தவெக தொண்டர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.