
மத்திய அரசு கொண்டு வந்துள்ள விஸ்வ கர்மா திட்டத்தை சாதிக் கல்வி திட்டம் என விமர்சித்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உதயநிதி தனது குடும்ப அரசியலைப் பயன்படுத்தி விஸ்வ கர்மா திட்டத்தை தவறான புரிதலுடன் விமர்சித்து கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கைவினைஞர்களுக்கு உதவி செய்து சுயவேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். இந்த திட்டம் சாமானிய மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றும் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. சாதிக் கல்வித் திட்டம் என்று இழிவுபடுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
உதயநிதி ஸ்டாலினின் அரசியல் கருத்துகளை விமர்சித்த தமிழிசை, சென்னை புறநகர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும், கழிவுநீர் கலந்த குடிநீரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களுக்கு உதவவும் துணை முதல்வர் நிதி செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.