வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 27-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும். வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் லேசான மூடுபனி காணப்படும். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை பதிவின்படி, அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊட்டி, நாலுமூக்கு பகுதியில் தலா 6 செ.மீ., காக்காச்சியில் 5 செ.மீ., மாஞ்சோலையில் 4 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம், ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் மண்டபத்தில் 2 செ.மீ. மழை பதிவானது.
குறைந்தபட்ச வெப்பநிலை பதிவின்படி, மலைப்பகுதிகளான கொடைக்கானலில் 9.5 டிகிரி செல்சியஸ், உதகை, குன்னூரில் 11.6 டிகிரி செல்சியஸ், வால்பாறையில் 16.5 டிகிரி செல்சியஸ், உள்பகுதியான கரூர் பரமத்தியில் 18 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 19.5 டிகிரி செல்சியஸ் மற்றும் வேலூரில் 20 டிகிரி செல்சியஸ் பதிவானது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.