சென்னை: பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர் சங்கம் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் பிப்ரவரி 11-ம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறவுள்ள உள்ளிருப்பு போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த டாஸ்மாக் சங்க கூட்டமைப்புக்கு டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதையடுத்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பின், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில தலைவர் பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நிர்வாக இயக்குநர் விரிவாக விளக்கினார். அரசாங்கத்திடம் இருந்து இன்னும் சில அனுமதிகளைப் பெற வேண்டிய தேவை இருப்பதை அவர் எங்களுக்குப் புரிய வைத்தார். இதையெல்லாம் சொல்லிவிட்டு எங்கள் போராட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
22 ஆண்டுகளாக எங்கள் கோரிக்கைகளுக்காக காத்திருக்கிறோம். பல அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். மேலும், அரசு கோரும் கால அவகாசத்தை ஏற்க முடியாது. திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும். போராட்டத்துக்கு முன் சுமூகமான முடிவு எடுக்கப்பட்டால், நிர்வாக இயக்குனரின் கோரிக்கையை பரிசீலிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.