சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரியும், 31 கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, சமீபத்தில் சென்னையில் நடந்த போராட்டத்தின் போது, பள்ளிக் கல்வித் துறை செயலாளரிடம் நடந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் சில நிறைவேற்றப்படும் என தமிழக அரசு உறுதி அளித்தது.
ஆனால், கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக டிடோஜாக் மாநில உயர்நிலைக் குழுவின் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் சமீபத்தில் நடைபெற்றது.
டிடோஜாக் மாநில நிர்வாகிகள் அ.வின்சென்ட் பால்ராஜ், ச.மயில், இரா. தாஸ், டி.ஆர். ஜான் வெஸ்லி, இலா. தியோடர் ராபின்சன் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரம் வருமாறு:-
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி செப்டம்பர் 3 முதல் 9-ம் தேதி வரை ஆசிரியர் சந்திப்பு இயக்கம் மற்றும் கண்டன ஆயத்த மாநாடுகள் நடத்தப்படும். செப்.,10-ல், ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்.
அதற்கு முன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செயலர், செப்., முதல் வாரத்தில் சந்தித்து, கோரிக்கைகள் குறித்து உத்தரவிட வலியுறுத்துவது உட்பட, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.