சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக, 27-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

நேற்று, தமிழ்நாட்டில் 5 இடங்களில் கடுமையான வெப்பம் பதிவாகியுள்ளது. அதன்படி, மதுரை விமான நிலையத்தில் 106.7 டிகிரி பாரன்ஹீட், மதுரை 104.36 டிகிரி பாரன்ஹீட், ஈரோடு 101.48 டிகிரி பாரன்ஹீட், பாளையங்கோட்டை மற்றும் பரங்கிப்பேட்டையில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.