சென்னை: தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்களை தமிழக அரசு அமைத்து வருகிறது. அந்த வகையில், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய நகரங்களில் மினி டைட்டில் பூங்காக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தமிழக சட்டப் பேரவையில் வணிகம் மற்றும் தொழில் துறைக்கான மானியக் கோரிக்கையின் போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி, கரூர் மற்றும் திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான வரைபடம் தயாரித்தல் மற்றும் திட்ட மேலாண்மைக்கான முதற்கட்ட பணிகள் கடந்த ஆண்டு துவங்கியது.

இதையடுத்து, திருவண்ணாமலையில் மினி டைடல் பார்க் அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. ரூ.34 கோடி செலவில் 4 தளங்களுடன் அமைக்கப்பட உள்ள இந்த டைடல் பார்க் ஓராண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.