இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக, மொத்தம் 15,000 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இந்த நடவடிக்கைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது நன்றியும் மகிழ்ச்சியும் உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக்நாதன்.

இன்று சட்டப்பேரவையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினர்களாக செயல்படக்கூடிய சட்டமுன்வடிவத்தை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது. அதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் சுமார் 12,000 பேருக்கு பதவி வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தீபக்நாதன், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “நாங்கள் பல ஆண்டுகளாக, அரசின் முக்கிய முடிவெடுக்கும் இடங்களில் மாற்றுத்திறனாளிகளின் இடத்தை வலியுறுத்தி வந்தோம். காரணம், நாங்கள் வாழும் இடங்களில் சின்ன விஷயங்களுக்கே அணுகல் இல்லாமல் தவிக்கிறோம். ஒரு வீல்சேர் வாங்குவதற்காக மாவட்ட தலைமையைக் கடக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது அந்த உதவிகளை நம் ஊராட்சி அலுவலகங்களிலேயே பெற முடியும்” என்றார்.
அதனைத் தொடர்ந்த அவர், “ஐநா கூறும் இன்சியான் உத்தி மற்றும் உரிமை உடன்படிக்கையின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் பங்கேற்பு உறுதி செய்ய வேண்டும் என்பதைக் கடைபிடித்து முதல்வர் எடுத்துள்ள இந்த தீர்மானம் மிகப் பெரிய வரலாற்றுச் செய்யுள். Local Government-இல் உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும்போது, அவர்களின் வாழ்வியல் மாற்றத்திற்கே வழிவகை ஏற்படும்,” என்றார்.
அவர் உருக்கமாக கூறியதாவது, “தந்தை பெரியார் இருந்திருந்தால், ‘மாற்றுத்திறனாளிகளுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என்று கேட்பார். அந்தக் கேள்விக்கான மிகச் சிறந்த பதிலாக, இன்று இந்த அரசியல் இட ஒதுக்கீடு அமைகிறது. கடற்கரையில் சாய்வு பாதை கோரிய போது எவ்வளவு போராட்டம் இருந்தது. ஆனால் இப்போது ரிப்பன் மாளிகையிலேயே மாற்றுத்திறனாளி ஒருவர் நம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போகிறார். அது எவ்வளவு பெருமையான விஷயம்!”
மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் கூட போட்டியிட முடியாது என்ற சட்டப்பிரிவை நீக்கி, அதற்குப் பதிலாக பதவி வழங்கும் இந்த சட்டம், சமூக நீதி 360 டிகிரியாக செயல்படுவதற்கான தொடக்கமாக இருக்கிறது என அவர் கூறினார். “இந்த சாதனைக்கு முழு நன்றியும், பெருமிதமும் ஸ்டாலின் சார் அவர்களுக்கு. Thank you so much Stalin sir… We love you sir… நன்றி என்பது ஒரு சிறிய வார்த்தை மட்டுமே. எங்களுடைய கடைக்கோடி மாற்றுத்திறனாளி ஒருவர் ஒரு நாள் பேசப் போகிறார் என்ற கனவுக்கு காரணம் நீங்கள்தான். இந்த வரலாறு அதை உறுதியாகச் சொல்லும்” என தீபக்நாதன் உருக்கமடைந்து கூறினார்.