சென்னை: சென்னை ஐசிஎஃப் ஆலை தற்போது அதிவேக வந்தே பாரத் ரயிலின் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறது. இதுவரை, 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் பயணிகளிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து, அமிர்த பாரத், வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் வந்தே மெட்ரோ உள்ளிட்ட பல்வேறு வகையான வந்தே பாரத் ரயில்கள் தயாராகி வருகின்றன.
கூடுதலாக, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை தயார் செய்து இரவில் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பிஇஎம்எல் ஆலையில் முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபரில் சென்னையில் உள்ள ஐசிஎஃப் ஆலைக்கு வந்தது. இந்த வந்தே பாரத் ரயிலில் 16 ‘ஏசி’ பெர்த்கள் உள்ளன. பயணிகளை ஈர்க்கும் வகையில் உட்புறம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, ஸ்லீப்பர் வசதியுடன் கூடிய இந்த வந்தே பாரத் ரயில் சென்னை ஐசிஎஃப் ஆலையில் இருந்து டெல்லிக்கு டெலிவரி செய்யப்பட்டது. 10 மாதங்கள் ஆன பிறகும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பயன்படுத்தப்படாதது பயணிகளை ஏமாற்றமடையச் செய்துள்ளது. இந்நிலையில், அடுத்த மாத இறுதிக்குள் இந்த ரயிலை பயன்பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
பயணிகளை ஈர்க்கும் வகையில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 180 கிமீ வேகத்தில் இயக்கக்கூடியது. பயணிகளின் வசதிக்காக, ரயில் படுக்கையின் உட்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் நீண்ட தூர பயணத்திற்கு தயாராக உள்ளது.
கட்டுமானத்தில் உள்ள இரண்டாவது ரயில் அக்டோபர் 15-ம் தேதி வரும். எனவே, அடுத்த மாத இறுதிக்குள் இரண்டு வந்தே பாரத் ரயில்களையும் சேவையில் கொண்டு வர ரயில்வே திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்.