தஞ்சாவூர்: தஞ்சாவூர் தனியார் திருமண மண்டபத்தில் மிக பிரமாண்டமாக மீனாட்சி மருத்துவமனை நடத்திய மாபெரும் இஃப்தார் கொண்டாட்டம் சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஊக்குவிக்கும் வகையில் நடந்தது. இதில் 2000 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
இந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியின் போது சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அக்கறை மற்றும் பொறுப்புறுதியின் ஒரு வெளிப்பாடாக தள்ளுபடி செய்த கட்டணங்களில் உடல்நல பராமரிப்பு சேவைகளைப் பெற உதவுவதற்காக கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு உடல்நல பராமரிப்பு அட்டைகளை மருத்துவமனை வழங்கியது.
சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஊக்குவித்து கொண்டாடும் விதத்தில் ஒரு சிறப்பான இஃப்தார் விருந்தை மீனாட்சி மருத்துவமனை ஏற்பாடு செய்து நடத்தியது. இதில் பல்வேறு பின்புலங்களைச் சேர்ந்த 2000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இஸ்லாமியர்களுக்கு புனித மாதமான ரமலான் நோன்பின்போது பல்வேறு சமயங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஊக்குவிப்பதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.
இஃப்தார் விருந்தின்போது, பாரம்பரியமாக பரிமாறப்படும் உணவுகள் இந்நிகழ்வில் இடம்பெற்றது. ரமலான் நோன்பு காலத்தின்போது ஆரோக்கியமாக உணவு உண்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஊட்டச்சத்துள்ள உணவுகள் பற்றிய ஆலோசனைக் குறிப்புகளையும் மீனாட்சி மருத்துவமனை இந்நிகழ்வில் வழங்கியது.
இஃப்தார் விருந்து நிகழ்வில் தலைமை விருந்தினராக மகாராஜா சில்க்ஸ் மற்றும் மஹால் நிறுவனத்தின் உரிமையாளர் முகமது ரஃபி கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்திய இவான்ஜெலிக்கல் லுத்தரன் ஆலயத்தின் பாஸ்டர் ஜேக்கப் ஜெயராஜ் உட்பட, கிறிஸ்தவ மற்றும் இந்து சமயத்தைச் சேர்ந்த முக்கியமான தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டது சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது. இதில் சிறப்புரை வழங்கிய மக்கள் தொடர்பு அதிகாரி மணிவாசகம், ஒற்றுமையின் முக்கியத்துவம் குறித்த செய்தியை வலியுறுத்தினார். ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி அல்மாஸ் அலி மற்றும் மீரா பஸ் உரிமையாளர் சர்ஃபுதீன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
சந்தையாக்கலுக்கான பொது மேலாளர் சிவக்குமார், இஃப்தார் விருந்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பு சலுகையை வழங்கும் பிரிவிலேஜ் அட்டைகளை வினியோகித்தார்.
இதில் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் தலைவர் டாக்டர். எஸ். குருசங்கர் கலந்து கொண்டு அவரது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். “இதுபோன்ற நிகழ்வுகளே ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் கனிவான கருணையின் சக்தியை நமக்கெல்லாம் வலுவாக நினைவூட்டுகின்றன. ரமலான் நோன்பின் உணர்வை கொண்டாடுவதற்கு அனைத்து சமுதாய மக்களையும் ஓரிடத்தில் ஒருங்கிணைத்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறோம். உடல்நல சிகிச்சை என்பதையும் கடந்து, பிணைப்புகளை மேலும் வலுவாக்குவதிலும் கருணையின் உண்மையான மதிப்பீடுகளை செயல்பாட்டில் பிரதிபலிக்கவும் ஒருவர் மற்றொருவருக்கு ஆதரவாக இருப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதிலும் நாங்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இயக்க செயல்பாடுகளுக்கான பொது மேலாளர் (பொ) செல்வபாண்டி, மருத்துவமனையின் அழைப்பை ஏற்று பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.
ஒத்திசைவும், நெருக்கமான நல்லுறவும் கொண்ட ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதில் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை கொண்டிருக்கும் அர்ப்பணிப்பையும். அக்கறையையும் வலியுறுத்தும் விதத்தில் 2000-க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்த இஃப்தார் நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தது.