மதுரை உயர்நீதிமன்ற கிளையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இதில் தவெக தரப்பு வாதம் முன்வைத்து, “நடிகர் ஷாருக்கான் அனுமதியின்றி நடத்திய கூட்டத்தில் உயிரிழப்பு ஏற்பட்டபோதும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அப்படியிருக்க, கரூர் வழக்கில் எங்கள் தலைவர்களுக்கு மட்டும் ஏன் வழக்கு பதிவு செய்யப்பட்டது?” என்று கேள்வி எழுப்பியது.

தவெக தரப்பின் வாதத்தில், கரூர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ரவுடிகள் புகுந்ததாகவும், காவல்துறை தடியடி நடத்தியது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் காலியான ஆம்புலன்ஸ் கூட்டத்துக்கு வந்தது சந்தேகத்திற்கு இடம் தருகிறது என்றும், கூட்டத்தை கட்டுப்படுத்துவது அரசின் பொறுப்பு தான், பொதுச் செயலாளர் மீது வழக்கு போட முடியாது என்றும் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் தவெக தரப்பு, காவல்துறை எஃப்ஐஆரில் குறிப்பிட்ட “அறிவுரை” என்ன என்பது வெளிப்படையாக சொல்லப்படவில்லை என சுட்டிக்காட்டியது. “கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியானார்கள்; ஆனால் இது காவல்துறை மற்றும் அரசின் அலட்சியத்தால் ஏற்பட்டது. எங்கள் மீது வழக்கு தொடர்வது காவல்துறையின் உள்நோக்கம்” எனவும் தெரிவித்தது.
2017 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடித்த ரயீஸ் படத்தின் விளம்பர நிகழ்ச்சியாக வதோதரா ரயில் நிலையத்தில் நடைபெற்ற ரோடு ஷோவில், ரசிகர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். ஆனால் அப்போது ஷாருக்கான் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அந்த சம்பவத்தை எடுத்துக்காட்டிய தவெக தரப்பு, “ஒரே மாதிரியான நிகழ்வுகள் நடந்தும் ஒருவருக்கு மட்டும் வழக்கு பதிவு செய்வது சட்டபூர்வமல்ல” என வாதிட்டது.