சென்னை: இதுகுறித்து செயல்தலைவர் ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:- ‘சட்டம் ஒரு இருட்டு அறை, அதில் வழக்கறிஞர் வாதம்தான் வெளிச்சம்’ என்று அண்ணா கூறினார். வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா 2025 என்பது வழக்கறிஞர் தொழிலின் சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் (என்ஜேஏசி) மூலமாகவும், நீதிபதிகள் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களில் கொலீஜியத்தின் பரிந்துரைகளைப் புறக்கணிப்பதன் மூலமாகவும் 2014-ம் ஆண்டு முதல் நீதித்துறையின் சுதந்திரத்தை மத்திய பாஜக அரசு திட்டமிட்டு அழித்து வருகிறது.
தற்போது, பார் கவுன்சில்களை தன் கட்டுப்பாட்டில் வைக்க முயற்சிப்பதன் மூலம், வழக்கறிஞர் தொழிலின் சுயாட்சியை பறிக்கவும், நீதித்துறையின் சுதந்திரத்தையே பலவீனப்படுத்தவும் முயற்சிக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் என்ற பெயரை மெட்ராஸ் பார் கவுன்சில் என்று மாற்றும் எண்ணம் பா.ஜ.க-வின் தமிழ் மீதான வெறுப்பை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு என்பது வெறும் பெயரல்ல; அது எங்கள் அடையாளம். தன்னெழுச்சியான போராட்டங்களும், கடும் எதிர்ப்புகளும் தற்போது மத்திய அரசை இந்த சட்ட வரைவை திரும்பப் பெற வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது. ஆனால், அதை மறுபரிசீலனை செய்து புதிய வடிவில் கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது. இந்த வரைவு சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும். வழக்கறிஞர் தொழிலின் சுயாட்சிக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என திமுக வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.